Skip to main content

நான் ஏன் தலித்தும் அல்ல? - தமிழ்ச் சமூகம் பற்றிய மீள் விசாரணை

டி.தருமராஜின் 'நான் ஏன் தலித்தும் அல்ல?' நூல் விமர்சனம்:
                         
     
     
  தமிழக வரலாற்றை தட்டையாக வாசித்துப்பார்த்தாலும்கூட கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் மேலடுக்குச் சாதிகள் கருத்தியல் வெளியிலும், பண்பாட்டு நடவடிக்கைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது குரூரங்களை நிகழ்த்தியே பெருமை கொள்கிறார்கள். இதனால் பல இழப்புகளையும் வலிகளையும் சுமந்து, வரலாற்றில் வீழ்ந்தும் நொடிந்தும் போனவர்கள் இன்று வரைக்கும் தனித்தே  கிடக்கிறார்கள். அரசியல் திரட்சியற்றும் கல்வி வேலைவாய்ப்புப் போன்ற  சமூகத்தகுதி நிலைகளிலும் ஓரங்கட்டப் பட்டே வருகிறார்கள்.  இவர்களின் விடுதலையின் பொருட்டு  தொண்ணூறுகளுக்குப் பின் எழுந்த ஒடுக்கப்பட்ட இயக்கங்களும், இலக்கியங்களும் உருத்திரண்டு மேலெழுந்து வந்த  வேகம் இன்று இல்லை.  அந்தக் கருமேகம் கலைந்து போனதற்கான  காரணங்கள் ஆராயப்பட வேண்டுமல்வா?
        இத்தகைய  பின்புலத்தோடு எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு வகையில் பதில் சொல்லத் தயாராகிறது ‘’நான் ஏன் தலித்தும்  அல்ல?’’என்னும் பிரதி. இது வரைக்கும் சொல்லப் பட்ட வரலாற்று முறையியலைக் கலைத்தும்,சொல்லப்பட வேண்டிய வரலாற்றை நுண்மையாக எடுத்து மொழிந்தும்  சமகால அரசியல் சூழலில் நிகழும் துயரங்கள் தொடங்கி, துர்மரணங்கள் வரைக்கும் கவனப்படுத்திய படியே தனித்து நிற்கிறது.
         ஒரு பக்கம், மன விருப்பத்தில்  தானாக வரும் காதல் என்னும் மெல்லிய உணர்வைக் காயடித்து, படுகொலை செய்து புதைத்து விட்டு, கெளரவத்தைக் காப்பாற்றியதாக  பெருமை கொள்கிறது சாதீயச் சமூகம். இங்கு, சாமி முக்கியமா? சாதி முக்கியமா? என்றால் கூச்சமின்றி சாதிதான் என்கிறது.இதனையொத்த பாசிசக் கருத்துக்களைக் கொண்ட மற்றொரு கூட்டம் நீங்கள் சாப்பிடும் உணவை நாங்களே முடிவு செய்வோம் என்கிறது.
   மாட்டுக்கறி நீ சாப்பிடுவேயானால் கொல்லப்படுவாய் என்பதுவே அவர்களின் தாரக மந்திரம்.  ஆக, அத்தனை பயங்கரங்களும் சாதீயின் பெயரிலும் சமயத்தின் பெயரிலும் நூற்றுக்கணக்கில் நடக்கிறதென்றால் குருதியும் சதையுமாக சாதிய ,சமயப் பயங்கரவாதம்  உயிரோடு இருக்கிறது என்றுதானே அர்த்தம்.இதனை இன்னும் கூர் தீட்டும் விதமாக சமகால அரசியலும்,அரசியலாளர்களும் பெருகிய படியே இருக்கிறார்கள் என்பதுதான் கவலையளிக்கும் விசயமாகும்.இவ்வாறிருக்க, தமிழகத்தின் பொதுக் குரலாக முற்போக்கு மாநிலம், பெரியார் அவதரித்த பூமி,நீதி கோரிய கட்சிகள் தோன்றிய சுயமரியாதை நிலம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.ஆனால்,ஒருவகையான பதற்றத்தோடு வாழும் மாநிலமாக தமிழகமும் மாறிப்போய் விட்டதை ஒத்துக் கொள்ளத்தானே வேண்டும்.
  இப்பிரதியானது, உடுமலைப் பேட்டை  சங்கர் படுகொலை தொடங்கி, மாட்டுக்கறி உணவின் அரசியல்,தமிழ்ச்சூழலில் ‘தலித்’ குறித்த  சொல்லாடல் மற்றும் அதனுடைய அரசியல் பெறுமானம், இலக்கிய வெளியில் வந்தடைந்திருக்கும்  இடம், மாதொருபாகன் நாவலை வைத்து முன்னெடுக்கப்பெட்ட சாதீய அரசியல், நிகழ்கால திராவிட அரசியலைப் பேசிய மெட்ராஸ் திரைப்படம் எனப்  பல விசயங்களை உள்ளடக்கி, சமூகத்தில் ‘’போலச் செய்தல்’’ என்று கட்டமைக்கப்பட்டுள்ள கருத்துருவாக்க வெளிக்கு மாற்றாக வரலாற்றில் ‘’திரும்பச்செய்தல்’’ எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதுவரையிலுமாக அத்தனை விசயங்களையும் கூர் தீட்டி ஆராய்கிறது..வெளிவந்த ஒருவருட காலத்தில் அறிவுத் தளத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கி நிற்கிறது.
சாதி குறித்தான ஆய்வுகள்:
  பத்துக்கட்டுரைகள் இடம்  பெற்றிருக்கும் இப்பிரதியில்,   ‘‘போலச் செய்தலும் திரும்பச் செய்தலும்’’ என்னும் கட்டுரையை மட்டும் விரிவாக விவாதிக்க  விரும்புகிறேன். ஏனெனில், சமகாலத்தை மிகத்தெளிவாக விசாரணை செய்வதோடு, சாதிகள் குறித்தான ஆய்வையும் மிகத் தீவிரமாக ஆராய்கிறது. பொதுவாக, உயர்ந்த சாதிகள் எந்தவித அலகுகளைக் கொண்டு இயங்குகின்றனவோ அவற்றையே தாழ்ந்தசாதிகளும் பின்பற்றுகின்றன அதாவது, போலச்செய்கிறன  என்பது பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் உண்மையாகும். தாழ்ந்தசாதிகளுக்குச் சொந்த குணம் ஏதும் இருக்காது என்பதாகவே வரலாறுகளும் பேசுகிறன. இதனையே “சமஸ்கிருதமயமாக்கல்” என்று அழைப்பர். இத்தகைய கருத்தியலை ஆய்வின் வழியாகக் கட்டமைத்தவர் M.N.SRINIVAS.இவரது ‘’Religion and society among the coorgs of southindia’’ மற்றும்“social change in india” ஆகிய ஆய்வுகள் மிகமுக்கியமானதாகும். ஒரு வகையில் இவரின் வழித்தடத்திலேயே, அல்லது இவரின் கருத்தியலைப் பாரபட்சமின்றி ஏற்றே பிற்காலத்திய ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். அவ்வகையில் இந்நூலாசிரியரே சில ஆய்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவைகளை இங்கு முன்வைப்பது பொருத்தமாக இருக்கும்.
        ‘லூயீ டுமோ’ என்னும் ஆய்வாளர்  மதுரை மாவட்டத்தில் வாழும் பிறான்மலைக் கள்ளர்களைப் பற்றி ஆய்வு செய்தவர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சாதிய படிநிலைமுறைகளை உள்வாங்கி இவர் எழுதிய மிக முக்கியமான புத்தகம் ‘‘homo-hierarchicus’’இந்நூலில் இவர், சாதியானது இந்திய சமூகம் கண்டடைந்த சமூகப் படிநிலை என்கிறார்.படிநிலை என்றால்,ஏற்றத்தாழ்வுகளை வரையறுக்கும் முறையியல் என்று பொருள்.இந்த முறையியல் சுத்தம்x அசுத்தம் என்கிற எதிர் கருத்தியலைக் கொண்டு இயங்குகிறது.இதன் மூலம் தீர்மானிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை எல்லாப் பிரிவினரும் சகஜமாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்னும் முடிவுக்கு வருகிறார்.
         இதன் பிறகு ‘மிசல் மோபா’ என்னும் ஆய்வாளர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ‘எண்டாவூர்’ என்னும் கிராமத்தை மையமாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வானது ‘’An untouchable community in south india: structure and consensous’’என்பதாகும். எண்டாவூர் கிராமத்தில் மக்களின் புழங்குவெளி அமைப்பும் மனநிலையும் எவ்வாறு இருக்கிறது என்று ஆராய்வதே நோக்கம்.அவ்வகையில் இவ்வூரில் உயர்ந்த சாதியாக ரெட்டியார் சாதி மக்களும் இவர்களை அடுத்து ஒடுக்கப்பட்ட   சாதிக்குழுக்களில் வள்ளுவப் பண்டாரம்,  பறையர், புரதவண்ணான் ,அருந்ததியர், கடைசியாக குருவிக்காரர்கள் என வாழ்கிறார்கள்.    
    ஆய்வாளர் இவ்வூரில் நடக்கும் எல்லாவிதமான பண்பாட்டு அசைவுகளையும் உற்று நோக்கிய பின்னர், “ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித்த பண்பாடொன்று கிடையாது மாறாக ரெட்டியார் சாதியின் நடவடிக்கைகளையே பின்பற்றுகிறார்கள். ஒடுக்கப்பட்ட சாதிகளும் தங்களுக்குக் கீழேருக்கும் சாதிகளை ஒடுக்குகிறார்கள்”.சான்றாக, ஒரே சாதிக்குள்ளிருக்கும் வள்ளுவர்கள் பறையர்களைக் கீழானவர்களாக நினைக்கிறார்கள். பறையர் சமூகத்தினருக்கு ஏவல் செய்யும் அருந்ததியினர் குருவிக்காரர்களை அடிமையாக நடத்துகிறார்கள். இது இந்திய சமூகதில் வாழும் உயர்ந்த சாதிகளின்  உளவியல். இதனையே, காலம் காலமாக இவர்களும் பின்பற்றுகிறார்கள் என்ற முடிவுக்கு வந்து சேர்கிறார். இவரது ஆய்வைப் பல சமூக ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டாலும் மறுப்பான கட்டுரைகளும் ஆய்வுளும் வந்துள்ளன. அதில் மிக மிக்கியமான ஆய்வு, ‘ரொபேர் தாலியேழ்’  நிகழ்த்தியதாகும். 
    இராமநாதபுரம் மாவட்டம் ‘வாழ்கிறமாணிக்கம்’ என்னும் ஊரில்  நிகழ்த்தப்பட்ட ‘’The world of untouchables: parayas of Tamilnadu’’.வாழ்கிறமாணிக்கத்தில் இந்துப் பறையர்கள், இந்துப் பள்ளர்கள் மற்றும் கிருஸ்துவ பறையர்கள் வாழ்கிறார்கள். இவ்விரண்டு சமூகங்கள் வாழ்ந்து வந்தாலும் ஒன்றுக்கொன்று வேறுபாடுகள் இல்லை. ஆய்வுகள் கட்டமைப்பது போல ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடிமைப் படுத்தும் மனப்பாங்கு அவர்களிடம் இல்லை என்று நிறுவுகிறார்.தீவிரமாக தீண்டாமையைக் கடைபிடித்தல்,அத்துமீறுதல், புழங்குவெளியைக் கட்டுப்படுத்துதல் கொடுமைப்படுத்துதல் போன்ற உயர்ந்தசாதிகளின் குணம் இவர்களிடம் கறாராக இல்லை. பொது வெளியில் கட்டமைப்பாகும் கருத்தியலில் இவர்கள் வாழ்ந்தாலும் மேல் சாதிகளின் குரூரம் இவர்களிடம் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்.இங்கு கவனிக்கத்தக்கது போலச்செய்தல் நிகழவில்லை என்பதனையே.
போலச்செய்தலும் திரும்பச்செய்தலும்:
       போலச்செய்தல் என்பது ஒருவகையில் சாதியில் மட்டுமல்ல ஒவ்வொரு செயலிலும் உண்டு. சில போலச்செய்தல்கள் தேவைதான் எனினும், அதுவே எல்லாநிலையிலும் இருக்கிறது  என்பது சுயத்தை மறுதலிப்பதாகும்.இந்தியத் துணைக்கண்டமானது பல்வேறு சாதிக்குழுக்கள் வாழும் நிலமாகும்.இக்குழுக்கள் தங்களுக்கான தனித்த குணத்தோடு வாழ்வதையே  குறிக்கோளாகக் கொண்டுள்ளன.இவ்வாறிருக்க ஒரு சாதி இன்னொரு சாதியைப் போலச் செய்தல் என்பது நடக்காத ஒன்று.மாறாக திரும்பச் செய்வது உண்டு.  இதனைவிரும்பாத உயர்ந்த சாதிகள் தங்களைப்போலச் செய்கிறார்கள் என்று கூறுவதாக டி.தருமராஜ் விளக்குகிறார்.இதிலிருந்தே திரும்பச்செய்தலை ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்க முயற்சிக்கிறார். இதனை நிறுவ இரண்டு வரலாற்று மனிதர்களின் வாழ்வியலைச் சான்றாக்கி நிறுவுகிறார். ஒருவர்,அறிவுத் தளத்தில் பெரிய  தடத்தினை உருவாக்கிய  சிந்தனையாளர் அயோத்திதாசர்.  மற்றொருவர்,  சமூக  நீதி  செயற்பாட்டாளர் இமானுவேல் சேகரன்.
        அயோத்திதாசர், ஆதியின் வரலாறு தேடி அலையும்  காலத்தில். இந்தநிலத்தில் தங்களுக்கான அடையாளம் மறுக்கப்பட்டுக்கிடப்பது மட்டுல்ல,மறைக்கப்பட்டுக்கிடக்கிறது என்பதையும் தெளிவாக உணர்கிறார். பல்வேறு தேடலின் விளைவாக இவர் உருவாக்கியதுதான் ‘’இந்திர தேச சரித்திரம்’’ இக்கதையாடலின் வழியாக யதார்த்த பிராமணர் Xவேசபிராமணர்  என்ற எதிமறையினூடாக ஆதி வரலாற்றைக் கட்டமைக்கிறார்.  ‘’பிராமணர்களைப் பிற சாதியினர் போலச்செய்கிறார்கள் என்று சொல்லப்படும் வாதத்திற்கு நேர்மாறாக,பிராமணர்கள் இந்த நாட்டின் பெளத்தக்குருக்களைப் போலச் செய்கிறார்கள்,அதுவும் வேசம் போடுவதன் மூலம் பொய்யாகப் போலச்செய்கிறார்கள்” என்று நிறுவுகிறார். 
   பார்ப்பாருக்கு மூத்தவன் பறையன் என்னும் சொலவடை தொன்மத்திலிருந்தே உருவாகியிருக்க வேண்டும்.ஏனெனில் ‘என் தம்பி பார்ப்பான்’ கதை மக்களிடம்  வழக்கத்திலிருக்கும் ஒன்றாகும். வழக்காறுகள் அனைத்தும் பறையர்கள் ஆதியில் கோயிலோடு நெருங்கிய தொடர்பிலிருந்தனர் என்றே கூறுகின்றன.இவ்வாறான விசயங்களையெல்லாம் அயோத்திதாசர் வரலாற்றில் செய்த எதிர்வினைகள். இவைகளை டி.தருமராஜ் வெகுவான தரவுகளின் வழியாக விளக்கிச் செல்கிறார்.
        மற்றொருவர் இமானுவேல் சேகரன். தென்தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட்டோரின் குரல். சாதிய மறுப்பு, புழங்கு வெளி உரிமையைக் கோரல்,அடிமை வேலையைத் துறத்தல், அரசியல் நுழைவு என நவீனகால அரசியலில் முகங்காட்டத் துணிந்த இவரை, சாதியச் சமூகம் கொலை செய்தது. இவர் இறப்பில் உருவான 1957 கலவரம்  தமிழக வரலாற்றில் பெரும் துயரம்.ஆனால்  இக்கலவரமே ஒடுங்குண்டுகிடந்த தேவேந்திர சமூகத்தை விழிப்படையச் செய்தது. அரசியல் காரணங்களின் வழியே  பெரும் புள்ளியாய், வரலாற்றையே திருப்பியவராக, கொடைவள்ளலாக சித்திரிக்கப்படும் முத்துராமலிங்கத் தேவரை முக்குலத்தோர் சமூகம்  ‘’குருபூஜை’’ என்னும் பெயரில் கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்றால் தேவருக்கு  நிகராக  இம்மானுவேல் சேகரனைத் தலைவராக்கி, தேவேந்திரர் சமூகமும் ‘’குருபூஜை’’ கொண்டாடுகிறார்கள். 
   வீழ்ந்தவரும் வீழ்த்தப்படுவதற்குக் காரணமாக இருந்தவராகச் சொல்லப்படுபவரும்  வரலாற்றில் ஒரே புள்ளியில் நிற்கிறார்கள். ஆனால் இதனைச் சாதியச் சமூகம் போலச் செய்தல் என்கிறது. உண்மையில் இங்குநிகழ்வது திரும்பச்செய்தல் ஆகும். (அதாவது நீங்கள்  ஒரு வரலாற்றைச் சமைக்கிறீர்கள் என்றால்  அதையே நாங்களும் சமைப்போம்) இவ்வாறு, சமகாலத்தில் நடக்கும் தமிழ் நில அரசியல் நடவடிக்கைகளையே கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் கொண்டு வருகிறார் டி.தருமராஜ். இவ்வாசிப்பானது, புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.புதிய தியரியாக்கத்தை முன்மொழிந்தவராக தனித்து நிற்கிறார். அவ்வகையில், தமிழ் ஆராய்ச்சிவெளியில் சாதிகளைப் பற்றி இவ்வளவு நுட்பமாக ஆராய்ந்து எழுதியது மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்..மேலும் மேலும் தொடர் வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரியது இப்பிரதியாகும்.

தருமராஜ். டி., 2016, நான் ஏன் தலித்தும் அல்ல? தலித் என்ற சாதியற்ற பேத நிலை, கிழக்கு பதிப்பகம், சென்னை.


Comments

Popular posts from this blog

நாட்டார் வழக்காற்றியலின் குணம் களப் பதிவில் நடந்த ருசிகர சம்பவம்: தமிழர்களின் தொன்மையான ஆயுதங்களில் ஒன்றான ‘வளரி’ பற்றி நாம் அனைவருமே அறிந்திருப்போம். ஆனால் வளரியையே சாமியாக வழிபடும் ஊர் ஒன்று மதுரை மாவட்டத்தில் இருக்கிறது. கருமாத்தூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒர் அழகான ஊர் ‘கோவிலாங்குளம்’. இவ்வூர் மக்களுக்கு ‘வளரிதான் சாமி;சாமிதான் வளரி’. கோவிலென்றும் சொல்ல முடியாது. ஆனால் கோவில்.நான்கு பேர் சேர்ந்து நிற்கும் இடம்தான். இந்தக் கோவிலுக்குப் பெயர்தான் ‘பட்டவன் சாமி..’ போரில் அல்லது சண்டையில் இறந்தவரைக்குறிக்கும் பெயர். தமிழ் நாட்டிலேயே இந்த ஊரில் தான் அதிகமான ‘வளரி’ பாதுகாக்கப்படுகிறது. ஒரிஜினல் வளரியைப் பார்க்க வேண்டும் என்றால் இங்குதான் வந்தாக வேண்டும். சுமார் 300 க்கும் மேற்பட்ட வளரிகள் உள்ளன. அன்றைய ஆங்கிலேய அரசானது தங்களது ஆட்சிக்கு எதிராக இருக்கும் அனைத்தையும் தடை செய்தது. அந்தவகையில் 1801- இல் ஆயுத ஒழிப்புத் தடைச்சட்டத்தை அமல்படுத்தியது. இந்தச் சட்டம் கடுமையாகப்பட்டது. மிகவும் அச்சுறுத்தலாக இருந்த ‘வளரி’ யின் மீது பாய்ந்தது. 25,000 கும் மேற...