Skip to main content
நாட்டார் வழக்காற்றியலின் குணம் களப் பதிவில் நடந்த ருசிகர சம்பவம்:




தமிழர்களின் தொன்மையான ஆயுதங்களில் ஒன்றான ‘வளரி’ பற்றி நாம் அனைவருமே அறிந்திருப்போம். ஆனால் வளரியையே சாமியாக வழிபடும் ஊர் ஒன்று மதுரை மாவட்டத்தில் இருக்கிறது. கருமாத்தூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒர் அழகான ஊர் ‘கோவிலாங்குளம்’. இவ்வூர் மக்களுக்கு ‘வளரிதான் சாமி;சாமிதான் வளரி’.



கோவிலென்றும் சொல்ல முடியாது. ஆனால் கோவில்.நான்கு பேர் சேர்ந்து நிற்கும் இடம்தான். இந்தக் கோவிலுக்குப் பெயர்தான் ‘பட்டவன் சாமி..’ போரில் அல்லது சண்டையில் இறந்தவரைக்குறிக்கும் பெயர். தமிழ் நாட்டிலேயே இந்த ஊரில் தான் அதிகமான ‘வளரி’ பாதுகாக்கப்படுகிறது. ஒரிஜினல் வளரியைப் பார்க்க வேண்டும் என்றால் இங்குதான் வந்தாக வேண்டும். சுமார் 300 க்கும் மேற்பட்ட வளரிகள் உள்ளன.



அன்றைய ஆங்கிலேய அரசானது தங்களது ஆட்சிக்கு எதிராக இருக்கும் அனைத்தையும் தடை செய்தது. அந்தவகையில் 1801- இல் ஆயுத ஒழிப்புத் தடைச்சட்டத்தை அமல்படுத்தியது. இந்தச் சட்டம் கடுமையாகப்பட்டது. மிகவும் அச்சுறுத்தலாக இருந்த ‘வளரி’ யின் மீது பாய்ந்தது. 25,000 கும் மேற்பட்ட வளரிகளைப் பறித்து காணாமல் செய்ததது. இந்த ஆயுதத்தை அவர்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றார்களா? அல்லது மண்ணுக்குள் போட்டுப் புதைத்தார்களா? யாருக்குத் தெரியும்? இன்று நாமோ, ஒரு சில வளரிகளை அருங்காட்சியங்களில்தான் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்.



சரி கதைக்கு வருவோம்.



கடந்த சனிக்கிழமை அன்று எனது ‘பஃபூன் யு டியூப்’ சேனலின் வாயிலாக கோவிலாங்குளம் வளரி வரலாற்றைத் தமிழக மக்களுக்குச் சொல்லலாம் என்று முடிவு செய்து களத்திற்குப் போனோம். இப்பயணத்தில் தோழர் கருத்துப்பட்டறை பரமன், தோழர் செல்ல பிரித்தா, மற்றும் எனது நண்பர் கிதியோன். இவர்தான் கேமராமேன். ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.





எங்களது பதிவுக்கு முன் ஏற்பாட்டைச் செய்தது தோழர் செல்வ பிரித்தா. இவரே ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் அக்கோவிலைப் பராமரிக்கும் பூசாரி என எல்லோரின் அனுமதியை வாங்கி வைத்திருந்தார்.



கோவிலாங்குளம் பெரிய ஊர். குறுக்கும் நெடுக்குமான தெருக்கள். சிறியதாகவும் பெரியதாகவும் வீடுகள். ‘பட்டவன் சாமி’யைத் தேடிக் கண்டுபிடித்துப் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.



நாங்கள் எந்த நம்பிக்கையில் போகிறோம் என்றால் நம்ம ஊரைப் படம் எடுக்கப் போகிறார்கள் பெரிய வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் மகிச்சியோடு போகிறோம். நாங்கள் வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தெரு சந்துகள் வழியாக நெருங்குகிறோம். பார்த்தால் ஒரே கூட்டம். பொதுமக்கள். குறிப்பாக பெண்கள்.



என் பின்னால் கேமராமேன் வந்து கொண்டிருந்தார். நாங்கள் அவர்களது பார்வைக்குப் பட்டு, அந்தா வராங்க என்று யாரோ சொல்ல…. நாங்கள் நெருங்க ……..



டேய் …. வராதிங்கடா….



என்னைய வெளிய கொண்டு போகாதிங்கடா…..



நான் விட மாட்டேன் உங்களை…..



டேய்… அந்த மாதிரியே போயிருங்கடா……



டேய்……



மூசு மூசு னு பட்டவன் சாமிக்குள் உள்ள போகவிடாமல் கை மறித்து ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு பெரியவர். அருள் வந்து ஆடுகிறார். எனக்கோ உள்ளுக்குள் ‘ஒதறல்’ எடுக்க ஆரம்பித்து விட்டது. பயந்து விட்டேன்.



நான் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேமாராமேனைக் கையைக்காட்டி அப்பாலேயே நிறுத்திவிட்டேன்.அவரோ கிறிஸ்துவர்.. நடப்பதை யூகித்தவர் அங்கேயே நின்றுவிட்டார். கை ஜாடை காட்டினார். நான் பேசி முடித்தபிறகு வாருங்கள் என்று எதிர் மொழி காட்டினேன்.





பெண்கள் கடுமையான வாங்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அந்தப் பெண்களில் உட்காந்தவாறு ஒரு அம்மா கைகளை முறுக்கிக் கொண்டே அருளோடு…



வேணாம் … நீ படம் பிடிச்சிட்டுப் போயிருவே…



நாங்க இராத்திரி முச்சுடும் தூங்காம கெடக்கவா….



ம்ம்ம்ம்….



எங்கள தூங்க விடாது…



தூங்க விடாது



பிறகு பட்டு அழுறது நாங்களா? நீங்களா?... ம்ம்ம்



படித்த பெண்களும் சேர்ந்து கொண்டார்கள்.. ஒன்றும் சமாளிக்க முடியல…





நான், பேசி சமாளிப்போம் என்று தைரியத்தை கொண்டு வந்து…



அம்மா.. நாங்க உங்க ஊர் வரலாற்றை ஊர் உலகுக்குச் சொல்லவந்திருக்கிறோம். என்றேன்.



அதெல்லாம் வேண்டவே வேண்டாம்.



எங்க சாமி எங்களோடயே இருக்கட்டும். வெளில சொன்னா ஊரவிட்டு எங்கள விட்டுப் போயிவிடும் என்றார்கள்.





நானோ.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருமணத்தை வருடம் தோறும் ஊரே பார்க்குது.. சமீபத்தில் காஞ்சி ‘அத்தி வரதரா’ தண்ணீயிலருந்து எடுத்ததிலிருந்து திரும்பவும் தண்ணிக்குள்ள வைச்சதும் வரைக்கும் நாமதான் பார்த்தோமே.. என்று . நடப்பு வரலாற்றை கொஞ்சம் எடுத்துப் போட்டேன். அடுத்த கணமே..





அதெல்லாம் துடியான சாமி இல்ல.. இது துடியான சாமி.. எங்கள படாத பாடு படுத்தும்.



அவ்வோளாதான்.



ஜோலி முடிந்தது.. இனி



பேசி பயன் இல்ல என்று முடிவுக்கு வந்து விட்டேன்.



கையை எடுத்துக் கும்பிட்டேன்.





இனிமேல் நின்றால் கூட்டம் கூடும் .. தேவையில்லை என்று முடிவுக்கு வந்து திரும்பிவிடோம். காலம் மாறியும் நாட்டுப்புற மக்கள் அதே அசலோடுதான் இருக்கிறார்கள்..



என்னத்த சொல்ல.





பிறகுகென்ன..



நாங்கள் நால்வருமாக 'செல்லம்பட்டி' வந்து தேநீரும் கடலைமிட்டாயும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி விட்டோம்..





No photo description available.

Comments

Popular posts from this blog

நான் ஏன் தலித்தும் அல்ல? - தமிழ்ச் சமூகம் பற்றிய மீள் விசாரணை

டி.தருமராஜின் ' நான் ஏன் தலித்தும் அல்ல?' நூல் விமர்சனம்:                                           தமிழக வரலாற்றை தட்டையாக வாசித்துப்பார்த்தாலும்கூட கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் மேலடுக்குச் சாதிகள் கருத்தியல் வெளியிலும், பண்பாட்டு நடவடிக்கைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது குரூரங்களை நிகழ்த்தியே பெருமை கொள்கிறார்கள். இதனால் பல இழப்புகளையும் வலிகளையும் சுமந்து, வரலாற்றில் வீழ்ந்தும் நொடிந்தும் போனவர்கள் இன்று வரைக்கும்  தனித்தே     கிடக்கிறார்கள். அரசியல் திரட்சியற்றும் கல்வி வேலைவாய்ப்புப் போன்ற     சமூகத்தகுதி நிலைகளிலும் ஓரங்கட்டப் பட்டே வருகிறார்கள்.  இவர்களின் விடுதலையின் பொருட்டு     தொண்ணூறுகளுக்குப் பின் எழுந்த ஒடுக்கப்பட்ட இயக்கங்களும், இலக்கியங்களும் உருத்திரண்டு மேலெழுந்து வந்த     வேகம் இன்று இல்லை.     அந்தக் கருமேகம் கலைந்து போனதற்கான     காரணங்கள் ஆராயப்பட வேண்டும...